தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ராமர் மகன் ஜெயக்குமார் என்ற சைமன் (54). இவர் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். இவரது உறவினரான எட்டயபுரம் தெற்கு ரத வீதியைச் சேர்ந்த கதிரேசன் (50), அப்பகுதியில் மின்சாதனப் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறார்.

நேற்று மதியம் ஜெயக்குமார் தனது வீட்டில் கதிரேசனுடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு இரண்டு இருசக்கர வாகனங்களில் 5 சிறுவர்கள் வந்து இறங்கினர். கையில் அரிவாள்களுடன் வீட்டிற்குள் கும்பலாகப் புகுந்த அவர்கள், அங்கிருந்த ஜெயக்குமார் மற்றும் கதிரேசன் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டினர்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வரவே, 5 சிறுவர்களும் அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனர். பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய இருவரையும் மீட்ட பொதுமக்கள், எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிவேக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் முன்விரோதம்:

இச்சம்பவம் குறித்து எட்டயபுரம் காவல் ஆய்வாளர் சேகர், உதவி ஆய்வாளர் செந்தில்முருகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், எட்டயபுரம் மற்றும் கோவில்பட்டியைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய 5 சிறுவர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில், கடந்த மாதம் தலைவரின் குருபூஜை நாளன்று கைதான சிறுவர்களில் மூவர் வடக்கு ரத வீதியில் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகச் சென்றுள்ளனர். இதனை ஜெயக்குமார் கண்டித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், நேற்று ஜெயக்குமாரையும், தடுக்க முயன்ற கதிரேசனையும் அரிவாளால் வெட்டியதாகச் சிறுவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 அரிவாள்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். பட்டப்பகலில் வீடு புகுந்து நடத்தப்பட்ட இத்தாக்குதல் எட்டயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.