கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடைந்து வந்த பல பெண்களுக்கு இந்த மாதத்திற்கான (நவம்பர்) உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாததற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாடு பெண்களின் பொருளாதாரச் சுமையையும், சுயமரியாதையையும் கருத்தில் கொண்டு திமுக தலைவரால் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டம் அமல்படுத்தப்பட்டது.

ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த இத்தொகை, திமுக ஆட்சியில் மாதந்தோறும் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் தவறாமல் வரவு வைக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த நவம்பர் மாதத்திற்கான உரிமைத்தொகை பயனாளிகளுக்கு இதுவரை சென்று சேரவில்லை என்ற தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது."

"நான் முதலமைச்சரானால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று பொய்யான தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உரிமைத்தொகையைக் கூடத் தகுதியுள்ள பெண்களுக்குத் தொடர்ந்து வழங்காமல் நிறுத்துவது எந்த வகையில் நியாயம்?

கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், விரைவில் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்புக்கு முற்றிலும் மாறாக, வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 தொகையை நிறுத்த முனைவது ஏன்? எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் முன்வைக்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் மௌனமாக இருக்கும் முதலமைச்சர், இதற்காவது உரிய விளக்கத்தை அளிப்பாரா?"

"திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்குவது நல்லாட்சிக்கான அடையாளம் அல்ல; மாறாக, மக்களின் நம்பிக்கைக்குத் தமிழக வெற்றிக் கழக அரசு செய்யும் துரோகமாகும். எனவே, எவ்வித தாமதமுமின்றி அனைத்துப் பயனாளிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" என கீதா ஜீவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.