தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அரசு பெண் கால்நடை உதவி மருத்துவரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறித் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி கணபதி நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூர் அரசு கால்நடை மருந்தகத்தில் கால்நடை உதவி மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இம்மருந்தகத்திற்கு மீரான்குளத்தைச் சேர்ந்த பால்ராஜ் மகன் ஜான்சன் என்பவர் தனது ஆடுகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக வந்து சென்றுள்ளார்.

அவருடன் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த சந்தன மரியான் மகன் ஜேசுராஜ் (47) என்பவரும் வந்துள்ளார். இந்நிலையில், பெண் மருத்துவர் கால்நடை மருத்துவமனைக்குக் கூடுதல் பணிக்காகச் செல்லும்போதெல்லாம், ஜேசுராஜ் அவரைப் பின்தொடர்ந்து சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இதனை அவர் கடுமையாகக் கண்டித்ததுடன், ஜான்சனிடமும் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.

ஜான்சன் அவரைக் கண்டிப்பதாகக் கூறியபோதிலும், அதன் பின்னரும் ஜேசுராஜ் மற்றும் ஜான்சன் ஆகிய இருவரும் இணைந்து மருத்துவரைப் பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். கடந்த மாதம் 6-ஆம் தேதி கலுங்குவிளையில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஜேசுராஜ் மற்றும் ஜான்சன் ஆகியோர் அந்த பெண் மருத்துவரை அவமானப்படுத்தும் நோக்கில் மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

மேலும், இவர்களுடன் காரியாண்டி பார்பரம்மாள்புரத்தைச் சேர்ந்த சிலைஸ்டன் மனைவி மரிய ஞானம் என்பவரும் சேர்ந்து கொண்டு, தொலைபேசி மூலமாக ஜேசுராஜைத் திருமணம் செய்து கொள்ளுமாறு மருத்துவருக்குத் தொடர்ந்து மன உளைச்சல் கொடுத்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் விசாரணை நடத்தி, ஜேசுராஜ், ஜான்சன் மற்றும் மரிய ஞானம் ஆகிய மூவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். இதையடுத்து, ஜேசுராஜை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஜான்சன் மற்றும் மரிய ஞானம் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.