தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தொகுதியில் நடைபெறும் அரசு நிகழ்வுகளில் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி மாநில அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கடுமையாக விமர்சித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் விளாத்திகுளம் பகுதியில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கோ, உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கோ எந்தத் தகவலும் முறையாகத் தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே இதுபோன்று நடந்தபோது சுட்டிக்காட்டியதற்கு, 24 மணி நேரத்திற்கு முன்பு தகவல் தெரிவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது; ஆனால் அது பின்பற்றப்படவில்லை. தொகுதி குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்துக் கேள்வி எழுப்புவேன் என்பதற்காகவே என்னை அழைக்கவில்லை.

விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட கே. தங்கம்மாள்புரத்தில் உள்ள சமூக நீதி விடுதியில் மாணவர்களுக்குக் குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் இல்லாத அவலநிலை உள்ளது. தொகுதியில் உள்ள 214 கிராமங்களில் 113 கிராமங்களுக்கு இன்னமும் குடிநீர் சென்றடையவில்லை. அரசு கட்டிடங்கள் திறப்பு விழாக்களுக்குக் கூட மக்கள் பிரதிநிதிகளை அழைப்பதில்லை. இது மக்கள் சொத்து; ஆட்சியாளர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல.

மேலும், "முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி நிர்வாகம் செயலிழந்து மரணப் படுக்கையில் இருக்கிறது. ராஜபக்சேவை மக்கள் ஓடவிட்டதைப் போல, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாத இந்த ஆட்சியையும் மக்கள் விரட்டியடிப்பார்கள். ஆளுங்கட்சியின் தவறுகளைத் தட்டிக்கேட்கும் எதிர்க்கட்சியாகவும், நிழல் அரசாகவும் திமுக தொடர்ந்து செயல்படும். எங்கள் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காவிட்டால் சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

ஆத்தூர் காவல் ஆய்வாளர் பணிநீக்க விவகாரத்தையும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக எம்எல்ஏ அனுப்பியதாகக் கூறப்படும் குறுஞ்செய்தி விவகாரத்தையும் ஒப்பிட்டு, ஆளுங்கட்சியினருக்கும் அதிகாரிகளுக்கும் இருவேறு நீதி பின்பற்றப்படுவதாக அவர் விமர்சித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர் "வைகோவிற்கு அரசியலில் ஒரு நிலைத்தன்மை கிடையாது. கடந்த காலங்களில் அதிமுக, திமுக என மாறி மாறி நிலைப்பாடுகளை எடுத்தவர். மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் விஜயகாந்தின் அரசியல் பயணத்தைப் பாதிப்புக்குள்ளாக்கியவர். தற்போது அவருடன் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட அவரால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை" என்றார்.