காவல்துறை பணியிலிருந்து நீக்கப்பட்ட ஆறுமுகநேரி முன்னாள் இன்ஸ்பெக்டர் திலீபன், தனது வீட்டுக்கு வந்த கும்பல் ஒன்று ஆபாசமாகத் திட்டி மிரட்டல் விடுத்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே உள்ள சொத்தவிளை பகுதியைச் சேர்ந்த திலீபன், கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியில் சேர்ந்தார். குமரி மாவட்டத்தில் கனிம வள கடத்தல் தடுப்புப் படை மற்றும் விபசார ஒழிப்புத் தடுப்புப் படைகளில் பணியாற்றிப் பல்வேறு அதிரடி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக, அனுமதியின்றி இயங்கிய மசாஜ் சென்டர்களை மூடியதுடன், விபசார புரோக்கர்கள் பலரையும் கைது செய்தார்.

தொடர்ந்து இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்றுத் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட அவர், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது சர்ச்சையில் சிக்கிப் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டார். பின்னர் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவிக்குப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டபோதும் அவர் பணியில் சேரவில்லை.

எந்தவித முன் அறிவிப்புமின்றி சுமார் 555 நாட்கள் பணிக்கு வராமலும், மருத்துவக் குழுவின் முன் ஆஜராகாமலும் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி அறிவுறுத்தலின்படி டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் திலீபனை காவல்துறை பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில், திலீபன் நேற்று இரவு சமூக வலைதளங்களில் இரண்டு வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தை நாடப் போவதில்லை; நான் சம்பளமில்லா விடுப்பில்தான் இருந்தேன். எனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன. தற்போது ரூ.20 லட்சம் வரை செலவு செய்து மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது. நிலங்களை விற்றுத்தான் மருத்துவச் செலவுகளைச் சமாளித்தேன்; யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை.

என்னைப் பணியிலிருந்து விடுவித்து அறிவிப்பு வந்தவுடன், ஆட்டோவில் எனது வீட்டுக்கு வந்த விபசார புரோக்கர்கள் கும்பல் என்னை ஆபாசமாகத் திட்டி மிரட்டல் விடுத்துச் சென்றனர். என்னிடம் பல முக்கிய ஆதாரங்கள் உள்ளன; அவற்றை நான் நிச்சயம் வெளியிடுவேன். 2027-இல் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களிடம் கேட்டு முடிவு செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இன்ஸ்பெக்டரின் இந்த வீடியோ பதிவு காவல்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.