தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு அருகேயுள்ள கே. கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நடேஸ்குமார் (44). இவர் அப்பகுதியில் பால்பண்ணை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள ஒரு கடை அருகே அவர் நின்று கொண்டிருந்தபோது மர்ம குத்திக் கொலை செய்துள்ளார்.

இது குறித்துத் தகவல் அறிந்த நாரைக்கிணறு காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த நடேஸ்குமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் புதியம்புத்தூர் அருகே உள்ள புதுப்பச்சேரி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த வெற்றிவேல் மகன் மகாராஜன் (35) என்பவர் அங்குள்ள ஒரு கடையில் மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு ஜிபே செய்தாராம். அதில் பணம் குறைவாக கொடுத்ததால் கடைக்காரருக்கும் மகாராஜனுக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறை நடேஸ்குமார் விலக்கி விட்டுள்ளார். அப்போது மகாராஜனை அவர் கையால் தாக்கினாராம். இதனால் ஆத்திரமடைந்த மகராஜன், அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மகராஜனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.