அன்றாட வாழ்வில் உடற்தகுதியைப் பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், இளைஞர்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தைப் புகுத்துவதற்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான 'அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி' நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை 6:00 மணி அளவில் நெடுந்தூர ஓட்டப் போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியைத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இப்போட்டிகள் வயது மற்றும் பாலின அடிப்படையில் வெவ்வேறு தூரங்களுக்கு நடத்தப்பட்டன. 17 முதல் 25 வயதிற்கு உட்பட்டோர்: ஆண்களுக்கு 8 கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும் ஓட்டப் போட்டி நடைபெற்றது. 25 வயதிற்கு மேற்பட்டோர் ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும் ஓட்டப் போட்டி நடைபெற்றது.

இந்த மாரத்தான் ஓட்டப் போட்டியானது மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, ஜார்ஜ் ரோடு, பெல் ஹோட்டல் கார்னர், ரோச் பூங்கா, பீச் ரோடு மற்றும் ரயில்வே கேட் வரை சென்று, பின்னர் அதே வழியாக மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தையே வந்தடைந்தது. இப்போட்டிகளில் ஆர்வம்டன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.