தூத்துக்குடி புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு அண்மையில் ஒரு தகவல் வந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த இணையதளம் மூலமாக முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்றும், அந்த லாபத் தொகை உடனடியாக அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை உண்மை என நம்பிய அந்த இளைஞர், மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்குப் பல தவணைகளாக மொத்தம் ரூ.3 லட்சம் வரை பணத்தை அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது வங்கி கணக்கில் லாபத் தொகை வரவு வைக்கப்பட்டிருப்பதாக அவரது செல்போனிற்குக் குறுஞ்செய்தி வந்துள்ளது.

இந்நிலையில், ஒரு வாரத்திற்குப் பிறகு வங்கிக்குச் சென்று பணத்தை எடுக்க முயன்றபோது, அவரது வங்கி கணக்கில் எந்தவிதப் பணமும் வரவு வைக்கப்படாதது தெரியவந்தது. அதன் பிறகே, மர்ம நபர்கள் போலியான குறுஞ்செய்தியை அனுப்பித் தன்னை ஏமாற்றிப் பணம் பறித்துள்ளதை அவர் உணர்ந்தார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இளைஞர் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள சைபர் கிரைம் காவல்துறையினர், பணமோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.