தூத்துக்குடி நகர் பகுதி வெள்ளபட்டி கடற்கரைப் பகுதியில், க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் மற்றும் தலைமைக் காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஐச்சர் லோடு வாகனத்தை காவல்துறையினர் சோதனையிடுவதற்காக நிறுத்த முயன்றனர். ஆனால், காவலர்களின் கட்டளையை மீறி நிற்காமல் சென்ற அந்த வாகனத்தை, காவல்துறையினர் துரத்திச் சென்று தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகில் மடக்கிப் பிடித்தனர்.

பிடிக்கப்பட்ட வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டபோது, இலங்கைக்குக் கடத்துவதற்காக ரகசியமாகக் கொண்டுவரப்பட்ட சுமார் 35 கிலோ எடையுள்ள 40 மூட்டை பீடி இலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட இந்த பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 60 லட்சம் ரூபாய் ஆகும்.

இதனைத் தொடர்ந்து, வாகனத்தை இயக்கிய அருணாச்சலம் மகன் முத்துச்செல்வம் (24) மற்றும் உடன் இருந்த செந்திவேல் மகன் திருக்குமரன் (23) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், லோடு வேன் மற்றும் பிடிபட்ட நபர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காகத் தூத்துக்குடி சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர்.