தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் சங்கத்தினர், இன்று அனல் மின் நிலையத்திற்கு ஆய்வுக்காக வருகை தந்த தமிழ்நாடு எரிசக்தித்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரை நேரில் சந்தித்துச் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததுடன், தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தனர்.

அமைச்சரிடம் வழங்கப்பட்ட அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: "ரூ.2.5 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லத் தாங்கள் எடுத்து வரும் முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இங்கு ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களாக உள்ள நாங்கள் அனைவரும் ஆரம்பத்தில் சாதாரணத் தொழிலாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும் உழைத்து, அனல் மின் நிலையத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்து படிப்படியாக இந்த நிலைக்கு வந்துள்ளோம்.

தூத்துக்குடி அனல் மின் நிலையம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை பல்வேறு இக்கட்டான காலகட்டங்களிலும் பணிகளைச் சிறப்பாகச் செய்து, தமிழக அரசின் அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் என்ற கொள்கைக்குத் துணை நின்று வருகிறோம். பழமையான இந்த மின் நிலையத்தில் மிகக் குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யவும், எந்தவிதத் தொழிலாளர் பிரச்சினையோ, அரசுக்கு இழப்போ ஏற்படாத வகையிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

இந்நிலையில், எங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. (3.25 சதவீதம்) மற்றும் இ.பி.எப். (13 சதவீதம்) ஆகிய பங்களிப்புத் தொகையை நாங்கள் எங்களது சொந்தப் பணத்திலிருந்து செலுத்தி வருகிறோம். இத்தொகை எங்களது பணி மதிப்பீட்டில் (Estimate) சேர்க்கப்படாததால், நாங்கள் கடுமையான நிதி நஷ்டத்தைச் சந்தித்து வருகிறோம். எனவே, ஏற்கனவே நடைமுறையில் இருந்ததைப் போல, நாங்கள் செலுத்தும் இ.எஸ்.ஐ. மற்றும் இ.பி.எப். தொகையைத் திரும்பப் பெறுவதற்கு உரிய ஆவணம் செய்ய வேண்டும்.

எங்கள் வாழ்வாதாரத்தையும், எங்களை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்து, தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில் அமைதியையும் தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியையும் காக்க வேண்டுகிறோம். மின்சார வாரியத்தின் மேம்பாட்டிற்காகத் தாங்கள் முன்னெடுக்கும் அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கும் நாங்கள் என்றென்றும் உறுதுணையாக நிற்போம்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகள் சிவா, ரமேஷ், சந்தனக்குமார், முத்து ராமலிங்கம், ராமர், பாலமுருகன், ஜோசப், முருகேசன், பாலசுப்பிரமணி, தாஸ், கார்த்திக், ஹரிஷ், கோகுல் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.