தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று தேர்தல் கல்வியறிவுக் குழு (ELC) சார்பில் வருங்கால மற்றும் இளம் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் வினாடி-வினா இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
மாவட்ட வருவாய் அலுவலரும் கூடுதல் தேர்தல் அலுவலருமான மூ. குருச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: "வருங்கால மற்றும் இளம் வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் தேர்தல் கல்வியறிவுக் குழுக்கள் முக்கியத் தளமாக விளங்குகின்றன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையின்படி, நவம்பர் 2 முதல் 20 வரை கல்வி நிறுவனம், சட்டமன்றத் தொகுதி மற்றும் மாவட்டம் ஆகிய மூன்று நிலைகளில் கட்டுரை மற்றும் வினாடி-வினா போட்டிகளை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, நவம்பர் 2 முதல் 7 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலா இரு மாணவர்களின் பெயர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து, நவம்பர் 10-ஆம் தேதி முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக நடத்தப்பட்ட போட்டிகளில் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் கட்டுரை மற்றும் வினாடி-வினா போட்டிகளில் தலா 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலருக்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.
"அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலிருந்தும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற 60 மாணவர்கள் மற்றும் வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற 60 மாணவர்கள் என மொத்தம் 120 மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான இறுதிச் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் 'தூய்மையான வாக்காளர் பட்டியலின் முக்கியத்துவம்' மற்றும் 'வாக்களிப்பதன் முக்கியத்துவம்' ஆகிய இரு தலைப்புகளில் கட்டுரைப் போட்டியும்; 'வாக்காளர் பட்டியல் தயாரிப்பு', 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் (EVM & VVPAT)', 'வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள்' ஆகிய மூன்று தலைப்புகளில் வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டன.
இன்றைய இறுதிச் சுற்றுப் போட்டிகளில் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற 10 மாணவர்கள் மற்றும் வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற 10 மாணவர்கள் என மொத்தம் 20 மாணவர்களுக்கு வரும் 24.11.2026 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் கல்வித் துறைக்கான ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்படும்" என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேர்தல் வட்டாட்சியர் தில்லைபாண்டியன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் திரளாகக் கலந்து கொண்டனர்.

