தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு 2026-27-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் 3,000 காற்றாலை இறகுகளைக் கையாண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 2,300 இறகுகளை விட 30.43 சதவீதம் அதிகமாகும். மேலும், காற்றாலை இறகுகளை ஏற்றி வந்த கப்பல்களின் எண்ணிக்கையும் 64-லிருந்து 70-ஆக உயர்ந்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் மொத்தச் சரக்குப் போக்குவரத்தில் ஏற்றுமதி 59 சதவீதமாகவும், இறக்குமதி 41 சதவீதமாகவும் அமைந்துள்ளது. இங்கிருந்து சீனா, ஜெர்மனி, ஸ்பெயின், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்குக் காற்றாலை இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதேபோல், இறக்குமதி செய்யப்பட்ட இறகுகள் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 2,030 இறகுகளையும், 2024-25-ஆம் நிதியாண்டில் 2,635 இறகுகளையும் கையாண்ட வ.உ.சி. துறைமுகம், கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் 4,922 இறகுகளைக் கையாண்டு 86.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது.
அதிகரித்து வரும் சரக்குப் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு, சுங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே 1,00,000 சதுர மீட்டர் திறந்தவெளி சேமிப்பு இடமும், கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் 1,50,000 சதுர மீட்டர் சேமிப்பு இடமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், 5, 6 மற்றும் 7-ஆவது சரக்குத் தளங்களில் 1,00,000 சதுர மீட்டர் தளம் அமைக்கப்பட்ட இடவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வ.உ.சி. துறைமுகத்தின் நவீன உள்கட்டமைப்பு, பிரத்யேக சேமிப்பு வசதிகள் மற்றும் திறமையான பணியாளர்களால் இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்குத் துறைமுகம் தொடர்ந்து பங்களித்து வருவதாகத் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

