தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கீழக்கோட்டை வாசல் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மனைவி பலவேசம் அம்மாள் (65). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பேரனுடன் பைக்கில் அப்பகுதியில் உள்ள புதுக்குடி ரேஷன் கடைக்குப் பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றுள்ளார்.

பொருட்களை வாங்கிக்கொண்டு இருவரும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாகப் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக இவர்களது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட பலவேசம் அம்மாள் படுகாயமடைந்தார்.

உடனடியாக மீட்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பலவேசம் அம்மாள் இன்று காலை சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.