தவெக ஆட்சியில் கடந்த 6 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 112 தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த மாவட்ட வாரியான பட்டியலைத் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ளார்.
அப்பட்டியலில் 'Thoothukudi' மற்றும் அதன் ஆங்கில உச்சரிப்பான 'Tuticorin' ஆகியவை வெவ்வேறு மாவட்டங்களாகத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு முறையே 07 மற்றும் 02 ஒப்பந்தங்கள் என இடம்பெற்றுள்ளது பெரும் குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 2026 முதல் கையெழுத்திடப்பட்ட 112 தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) மூலம் ரூ.1,14,811.91 கோடி முதலீட்டு உறுதிப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 1,32,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட 'District-wise Split of MoUs' (மாவட்ட வாரியான புரிந்துணர்வு ஒப்பந்தப் பிரிவு) பட்டியலில், ஒரே மாவட்டத்தின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்கள் வெவ்வேறு மாவட்டங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் வெளியிட்ட அந்தப் பட்டியலில், ஒரு பகுதியில் 'Thoothukudi - 07' எனவும், மற்றொரு பகுதியில் 'Tuticorin - 02' எனவும் தனித்தனியாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியும், அதன் ஆங்கில உச்சரிப்பான 'டூட்டிகோரின்' (Tuticorin) என்பதும் ஒரே மாவட்டம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை கவனிக்காமல் மாவட்ட வாரியான பட்டியலில் ஒரே மாவட்டத்தை ஆங்கில எழுத்து மற்றும் உச்சரிப்பு மாற்றத்தின் காரணமாக வெவ்வேறு மாவட்டங்களாகப் பிரித்து வெளியிட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. “ஒரே மாவட்டம் தானே, இதை எப்படித் தனித்தனி மாவட்டங்களாகக் கணக்கிட்டார்கள்?” எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதுகுறித்துத் தொழில் துறை அமைச்சர் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

