தூத்துக்குடியில் அனுமதியின்றிச் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தனியார் ரிகிரியேஷன் கிளப்பில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி 4பேரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட முத்தம்மாள் காலனி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ரிகிரியேஷன் கிளப் ஒன்று அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்தது. இது குறித்துப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலிருந்து எழுப்பப்பட்ட அதிருப்தி புகார்களின் அடிப்படையில், நெல்லை சரக டிஐஜி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் தீவிரக் கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் தனசேகரன் அறிவுறுத்தலின்பேரில் நேற்று இரவு 8.30 மணியளவில் காவல்துறையினர் குறிப்பிட்ட அந்த கிளப்பில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாகச் சூதாட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த மாரிமுத்து (39), பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்த விக்னேஷ் (37), திரேஸ்புரத்தைச் சேர்ந்த ராஜன் (52) மற்றும் தாளமுத்துநகரைச் சேர்ந்த கருப்பசாமி (30) ஆகிய 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், அந்தச் சூதாட்ட கிளப்பில் இருந்து 162 சூதாட்ட விளையாட்டு கார்டுகள், 110 பிளாஸ்டிக் டோக்கன்கள் மற்றும் 4 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாகச் சிப்காட் காவல் நிலையத்தில் மேற்கண்ட 4 பேர் உள்பட மொத்தம் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இதுகுறித்துக் கூடுதல் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் அனுமதியின்றிச் சூதாட்ட மையம் இயங்கியதும், காவல்துறை அதிரடியாகச் சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

