தூத்துக்குடி அரசு மருத்துவமனை புற்றுநோய் பிரிவில் தற்காலிக பணியாளர்களாக ஏராளமான பெண் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்குக் கடந்த 6 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாமல் மருத்துவமனை நிர்வாகம் இழுத்தடித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சம்பளம் இல்லாததால் தங்களது குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், வீட்டு வாடகை, குழந்தைகளின் கல்விக் கட்டணம் செலுத்துதல் மற்றும் கடன் தொகையைக் கட்டுவதில் தீவிர அவதி ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை நேரில் கேட்டும் உரிய பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த தற்காலிக பெண் பணியாளர்கள், இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து புகார் மனு அளித்தனர். அதில், உடனடியாக தங்களுக்கு நிலுவையில் உள்ள 6 மாத சம்பளத்தை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: "புற்றுநோய் பிரிவில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்பது உண்மைதான். தற்காலிக பணியாளர்களுக்காக கடந்த 2023-25-ஆம் ஆண்டில் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தத் தற்காலிக பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், நிதி கையாளுவதிலும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் தவறுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக, கடந்த 45 நாட்களாகச் சென்னையில் இருந்து வந்த தணிக்கை அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை ஓரிரு வாரங்களில் நிறைவடைந்தவுடன், தற்காலிக பணியாளர்களுக்கான நிலுவைச் சம்பளம் உடனடியாக விடுவிக்கப்படும்" என்றார்.