திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, கோயில் வளாகத்தின் முக்கியப் பகுதிகள் உள்பட 16 இடங்களில் பி.எஸ்.என்.எல். சார்பில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பி.எஸ்.என்.எல். நிறுவன நெல்லை வணிகப்பிரிவு முதன்மை பொது மேலாளர் ராஜேஷ்குமார் வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:"திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தடையற்ற இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காகப் பி.எஸ்.என்.எல். நிறுவனம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கோயில் வளாகத்தின் முக்கியப் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் 16 இடங்களில் இலவச வைஃபை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இச்சேவையில் பி.எஸ்.என்.எல். பாரத் பைபர் (Bharat Fiber) வாடிக்கையாளர்கள் தங்களது தற்போதைய திட்டத்தின் வேகத்திலேயே வைஃபை சேவையைப் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பி.எஸ்.என்.எல். மொபைல் வாடிக்கையாளர்களுக்குத் தினமும் 1 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படும்.
பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் வெறும் ரூ.10 செலுத்தி ஒரு நாளுக்கு 1 ஜிபி டேட்டாவைப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்ளலாம். கோவில் வளாகத்தின் பல்வேறு இடங்களில் பி.எஸ்.என்.எல். வைஃபை இணைக்கும் முறைகள் ஆங்கிலத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. எனவே, கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி இன்டர்நெட் சேவையைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

