தூத்துக்குடியின் தந்தை குரூஸ் பர்னாந்தின் 157-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நெய்தல் எழுத்தாளர் வாசகர் சங்கம் சார்பில் புனித பிரான்சிஸ் சவேரியார் பள்ளி வளாகத்தில் 160-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்ற பேச்சுப்போட்டி மற்றும் இரு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவையொட்டி, குரூஸ் பர்னாந்து பயின்ற புனித பிரான்சிஸ் சவேரியார் பள்ளி வளாகத்தில் காலையில் மாணவ-மாணவியருக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், ஆலந்தலை, வீரபாண்டியன்பட்டணம், புன்னைக்காயல், பழையகாயல், சிப்பிகுளம், கீழவைப்பார் உள்ளிட்ட கடலோர ஊர்கள் மற்றும் தூத்துக்குடி மாநகரப் பள்ளிகளைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்நிகழ்வுக்கு அஜிதா ஆக்னல் தலைமை தாங்கிப் போட்டியைத் தொடங்கி வைத்தார். பள்ளியின் தலைமையாசிரியர் அருள்திரு அமல்ராஜ் சே.ச. ஆசியுரை வழங்கினார். மெரிண்டோ வில்லவராயர், துறைமுகம் புளோரன்ஸ், டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவியருக்குமான அன்பின் விருந்தினை அந்தோணிசாமி தொடங்கி வைத்தார்.

பிற்பகலில் நடைபெற்ற இரண்டாவது அமர்வில் இரு புதிய நூல்கள் வெளியிடப்பட்டன. இந்நிகழ்வுக்கு முனைவர் பெர்க்மான்ஸ் குணவதி பெர்னாண்டஸ் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் முனைவர் பிரான்சிஸ் சேவியர் சே.ச. ஆசியுரை வழங்கினார். வீரபாண்டியன்பட்டணம் ஊர்த் தலைவர் பெயிட்டன் ராயன், பரதவர் அரசியல் எழுச்சிப் போராளிகள் அமைப்பின் தலைவர் கனிட் ராஜ், காங்கிரஸ் கட்சியின் புல்டன் ஜெசின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் ஆசிரியர் யூஜின், குரூஸ் பர்னாந்து குறித்த பாடலை எழுதிப் பாடியதுடன், வெனான்சியுஸ் ரொட்ரிக்ஸின் 'முப்பெரும் பார்வை' நூலை வெளியிட்டார். ஆசிரியர் எட்வின் சார்லஸ் நூலைப் பெற்றுக்கொள்ள, பேராசிரியர் முனைவர் ஜாக்சன் நூலை அறிமுகம் செய்து பேசினார். தொடர்ந்து, ஆசிரியை பனிமய சுகந்தியின் 'ஒளிரட்டும் வாழ்வு' நூலை மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் வெளியிட, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயபால் பெற்றுக்கொண்டார்; பிரபாவதி நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். மேலும், பேச்சுப்போட்டிக்கு நடுவர்களாகப் பணியாற்றிய 20 நடுவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மாலையில் நடைபெற்ற மூன்றாவது அமர்வுக்குக் கென்னடி பர்னாண்டெஸ் தலைமை தாங்கினார். தமிழ்ச்செம்மல் முத்தாலங்குறிச்சி காமராசு, மருத்துவர் முகம்மது நஸிர், நவரோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் துணைத்தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம் சிறப்புரையாற்றினார்.

இதில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 என மூன்று பிரிவுகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.30,000 பரிசுத் தொகையையும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் ஆறுதல் பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினார்.

முன்னதாக ஆசிரியர் சாக்ரோ வரவேற்புரையாற்றினார். காஸ்ட்ரோ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த நெய்தல் எழுத்தாளர் வாசகர் சங்கத்தின் ஆசிரியர் தமிழ்ச்செம்மல் நெய்தல் அண்டோ நன்றியுரை கூறினார். இதில் திரளான பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.