தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் பகுதியில் உள்ள 15 கடைகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், தடை செய்யப்பட்ட 12 கிலோ ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.6,500 அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம், கோட்டம் 17, வார்டு 51-க்கு உட்பட்ட திரு.வி.க. நகர் பைபாஸ் சாலைப் பகுதியில் இன்று (நவ. 16) தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்கு எதிராக மாநகராட்சி அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் அப்பகுதியில் உள்ள 15 கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், அரசு தடை செய்துள்ள நெகிழிப் பொருட்களை விற்பனை மற்றும் பயன்பாட்டிற்காக வைத்திருந்த கடைகளில் இருந்து மொத்தம் 12 கிலோ நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிமீறலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.6,500 அபராதம் விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை இனி விற்பனை செய்யக்கூடாது எனவும், அதற்குப் பதிலாகத் துணிப்பை உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக மாநகராட்சி சார்பில் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்படும் எனவும், விதிமீறும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்து, துணிப்பைகளைப் பயன்படுத்தித் தூய்மையான தூத்துக்குடியை உருவாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

