இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளருமான பெ. சக்திவேல் தலைமையில், தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி செயலாளர் இசக்கி முத்துக்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது : வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரி கடந்த பல ஆண்டுகளாக முருக பக்தர்கள் போராடி வருகின்றனர். கடந்த 2025 டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமெனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
ஆனால், நீதிமன்ற உத்தரவை அவமதித்துத் தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் அரசு செயல்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள மனுவில், தற்போது புதிதாக அமைந்துள்ள அரசு முருக பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து, வரும் கார்த்திகை தீபத் திருநாளில் (நவம்பர் 24) திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றிட ஆவன செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்வதாக இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சரவணகுமார், செயற்குழு உறுப்பினர்கள் பலவேசம், முத்து லட்சுமணன், மண்டல தலைவர்கள் வெங்கடேஷ், சுதாகர், பாலமுருகன் மற்றும் பாஜக ஆன்மீக பிரிவு தலைவர் ஐயப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

