திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று கந்த சஷ்டி திருவிழா நிறைவடைந்த நிலையில், கோவில் கடற்கரையில் கடல் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கிக் காணப்பட்டது.

இதனால் கடலுக்குள் இருந்த பச்சைப் பாறைகள் வெளியே தெரிந்தன. கடல் உள்வாங்கியதைப் பார்த்த பக்தர்கள் ஆர்வத்துடன் கடற்கரையில் குவிந்து, கடலுக்குள் இறங்கி செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, கடல் உள்வாங்கியிருப்பதை அறியாத சிறு குழந்தைகள் ஆபத்தை உணராமல் கடற்கரைப் பகுதியில் விளையாடி வருகின்றனர். மேலும், முதியவர் ஒருவர் தனது தலையில் தெர்மாகோலை வைத்துக்கொண்டு உள்வாங்கிய கடல் பகுதியில் படுத்து ஓய்வெடுக்கும் காட்சியும் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கிடையே, கடல் உள்வாங்கியதால் வெளியே தெரியும் பாறைகளின் மீது சில பக்தர்கள் ஆபத்தை உணராமல் அமர்ந்து செல்ஃபி எடுத்து வருகின்றனர்.கடலின் நீரோட்டம் மற்றும் அலைகளின் மாற்றம் காரணமாக திடீரென கடல் மீண்டும் உள்ளே வரக்கூடிய வாய்ப்பு இருப்பதால், பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.

எனவே, கடல் உள்வாங்கியிருக்கும் பகுதிக்குள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் செல்வதைத் தவிர்க்கவும், பாறைகள் மீது ஏறி புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்கவும், பாதுகாப்புப் பணியில் உள்ள காவல்துறையினர் மற்றும் கடலோரக் காவல் பணியாளர்கள் உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.