தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தைத் தொடர்ந்து, கப்பல்களுக்குத் தகவல் தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமான் தீவின் போர்ட் பிளேயருக்கு மேற்கு-தென்மேற்கே சுமார் 700 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 860 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான வெயில் அடித்து வந்த நிலையில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகு மீனவர்கள் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளைக் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்துத் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல் தெரிவிக்கும் வகையில், துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், கப்பல்கள் பாதுகாப்பான பாதைகளில் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

