தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே வைரவம் கிராமத்தில் 9-ஆம் நூற்றாண்டு சிவாலயமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ ஞானாதீஸ்வரர் சமேத ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 10-ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 6 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் தினமும் சுவாமி, அம்பாள், ஸ்ரீ முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களுக்குப் புனித நீரூற்றி அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று ஞாயிற்றுக்கிழமை, பல்வேறு உருவங்களில் உருமாறி வந்த சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து முருகப்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ அலங்கார பூஜைகள் நடைபெற்றன. விழாவின் தொடர்ச்சியாகத் திங்கள்கிழமை (நவ. 16) விக்னேஸ்வர பூஜை, ஹோமம், திருக்கல்யாண சடங்குகள், மாங்கல்ய தாரணம், மகா தீபாராதனை மற்றும் திருக்கல்யாண விருந்து நடைபெற உள்ளது.
சாத்தான்குளம் ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோயில்:
சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் சமேத ஸ்ரீ விசாலாட்சி அம்மாள் திருக்கோயிலில் கடந்த 10-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை சன்னதி தெரு மற்றும் கீழரத வீதியில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில், பல்வேறு உருவங்களில் வந்த சூரனை ஸ்ரீ ஆறுமுக நயினார் வதம் செய்தார். தொடர்ந்து ஸ்ரீ வண்டிமலச்சி அம்பாள், வண்டிமலையான் சுவாமி கோயில் முன்பு எழுந்தருளிய ஸ்ரீ ஆறுமுக நயினாருக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இக்கோயிலில் திங்கள்கிழமை (நவ. 16) திருக்கல்யாண தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை (நவ. 17) காலை ஸ்ரீ ஆறுமுக நயினார் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளன.
ஸ்ரீ பஞ்சபிரம்ம அம்பிகை மடம்: சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீ பஞ்சபிரம்ம அம்பிகை மடம் மற்றும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 6 நாட்கள் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
பள்ளக்குறிச்சி: சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளக்குறிச்சி ஸ்ரீ வரகுணபாண்டீஸ்வரர் சமேத வாடாமலை அம்பாள் திருக்கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
தச்சமொழி: சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 10-ஆம் தேதி தொடங்கிய கந்தசஷ்டி விழாவின் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று இரவு ஸ்ரீ முருகர் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் திருக்கல்யாண விருந்து நடைபெற உள்ளது.

