தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதுக்கிராமம், சிந்தாமணி நகர் முதல் தெருவைச் சேர்ந்த காளிராஜ் மகன் கருப்பசாமி (30). சமையல் மாஸ்டராகப் பணியாற்றி வரும் இவர், வசந்தம் நகர் பகுதியில் முயல் மற்றும் கோழிகள் வளர்க்கும் பண்ணையையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி பண்ணைக்குச் சென்ற கருப்பசாமி, முயல்கள் மற்றும் கோழிகளுக்குத் தீவனம் வைத்துவிட்டு வசந்தம் நகர் முதல் தெருவின் கடைசியில் உள்ள முட்புதர் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல், கருப்பசாமியை வழிமறித்து அரிவாளால் தாக்கியதுடன், அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 10 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
இத்தாக்குதலில் காயமடைந்த கருப்பசாமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றார். மேலும், இச்சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையின் அடிப்படையில், இச்சங்கிலிப் பறிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய 2 இளஞ்சிறார்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்றொரு நபரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

