தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள பூச்சிக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மனைப்பிரிவு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) நடைபெற்றது. விழாவிற்குத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்து, புதிய மனைப்பிரிவைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வணிகர்களுக்குக் கடுமையான சுமையாக மாறியுள்ள மின்சார கட்டண உயர்வில் மாநில அரசு தளர்வுகள் செய்ய வேண்டும். மேலும், வீடுகளுக்கு வழங்குவது போலவே சிறு கடைகளுக்கும் சோலார் மின் உற்பத்தித் திட்டத்திற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.

சாமானிய சிறு வணிகர்களைப் பாதுகாக்கும் வகையில், ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை அரசு போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

உணவுப் பொருட்கள் சேமிப்பு தொடர்பாக மாநில அரசு வைத்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள் உள்நாட்டு ரைஸ் மில்கள் மற்றும் சிறு வணிகர்களைப் பெரிதும் பாதிக்கின்றன. எனவே அச்சட்டத்தை முதல்வர் திரும்பப் பெற வேண்டும். சிறிய நிறுவனங்களைச் சோதனையிட்டுப் பொருட்களைப் பறிமுதல் செய்வதற்குப் பதிலாக, பெருமளவில் பொருட்களை இருப்பு வைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து விவாதித்ததை அடுத்து, அது தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இக்கட்டணம் கட்டாயமாக அமல்படுத்தப்படாது என்ற நம்பிக்கை உள்ளது.

மின்சாரக் கட்டணம், பெட்ரோல், டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வு போன்றவையே விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணங்களே தவிர, வியாபாரிகள் காரணம் அல்ல. தமிழகத்தில் விவசாயம் குறைந்து வருவதால் அண்டை மாநிலங்களை அரிசிக்காக நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாற்ற ஏரிகள் மற்றும் குட்டைகளை அமைத்து நீர் ஆதாரங்களைப் பெருக்க வேண்டும்.

இந்த ஆண்டு தீபாவளிச் சந்தையில் பணப்புழக்கம் குறைந்திருந்ததாலும், கடைகளில் பட்டாசு மற்றும் இதர பொருட்கள் தேங்கியதாலும் வியாபாரம் சற்று மந்தமாக இருந்தது. எனவே, வியாபாரிகள் வட்டிக்குப் பணம் வாங்குவதைத் தவிர்த்து, தேவையில்லாத செலவுகளைக் குறைத்துத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் சின்னத்துரை, மாநில இணைச் செயலாளர் தங்கையாகணேசன், தொழிலதிபர்கள் கனகராஜ், குமரன், புகழேந்தி, சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத் தலைவர் லூர்து மணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.