தூத்துக்குடி புறநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாவில் ஐடி வைத்துள்ளார். அவரது ஐடிக்கு பிரியா சுக்லா என்ற ஐடியில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அதில் தங்களது ஒட்டலுக்கு ரிவியூ செய்து அதை கூகுள் மேப் பில் பதிவேற்றினால் பணம் கிடைக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் அந்த ஒட்டலை ரிவியூ செய்ததும் முதற்கட்டமாக அவரது வங்கி கணக்கிற்கு ரூ.2870 வரவு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த ஐடியில் இருந்து இதில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என கவர்ச்சிகரமாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதை உண்மை என நம்பிய அந்த வாலிபர் ஜிபே உள்ளிட்டவற்றின் மூலம் அவர்கள் தெரிவித்த எண்களுக்கு ரூ.1.90 லட்சம் வரை அனுப்பி வைத்துள்ளார். இதற்கான அவரது ஊக்க தொகை அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் வங்கியில் இருந்து வந்ததுபோல எஸ்எம்எஸ் வந்துள்ளது.

ஆனால் அவரால் அந்த பணத்தை அவரது கணக்கில் இருந்து எடுக்க முடியவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து அவர் இதுகுறித்து சைபர் கிரைம் ஆன்லைன் போர்ட்டலில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்துள்ள போலீசார் ரூ.1.90 லட்சத்தை மோசடி செய்த கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.