தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் உடனுறை ஸ்ரீ பாகம்பிரியாள் திருக்கோவிலில் போலி ரசீதுகள் மூலம் பல லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மீது குற்ற வழக்குப் பதிவு செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் சமூக ஆர்வலர் எம். சுடலைமணி என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகர மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் உடனுறை ஸ்ரீ பாகம்பிரியாள் திருக்கோவிலின் செயல் அலுவலராகத் தமிழ்ச்செல்வி என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் 08.04.2022 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, திருக்கோவில்களில் கட்டணச் சீட்டுகளுக்கு அச்சடிக்கப்பட்ட ரசீது முறை 10.04.2022 முதல் ரத்து செய்யப்பட்டு, கணினி ரசீது மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், மேற்கண்ட திருக்கோவிலில் போலியான ரசீதுகள் மூலம் பல லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்ததாகச் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எனவே, பக்தர்களின் காணிக்கை மற்றும் உண்டியல் பணத்திலும் மோசடிகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்துத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மத்திய பாகம் காவல் நிலைய போலீசார் மூலம் விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

மேலும், தமிழ்ச்செல்வி மற்றும் இக்குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்தவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது BNS சட்டப் பிரிவுகள் 316(4) மற்றும் 318(4) ஆகியவற்றின் கீழ் குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் இக்கோவில் மற்றும் பிற திருக்கோவில்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பை முழுமையாக மீட்டெடுக்க உத்தரவிட வேண்டும் இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.