தமிழக அரசின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்துக் குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழிற்சாலைக் கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்யச் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனக் கட்டிடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களில் மழைநீர் சேமிப்பு அமைப்பைத் தவறாமல் அமைக்க வலியுறுத்தி, பதிவு பெற்ற கட்டுமானப் பொறியாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
மழைநீர் சேமிப்பின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்துக் கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளதாவது : தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், அனைத்துக் குடியிருப்பு, குடியிருப்பு அல்லாத வணிகம் மற்றும் தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து விதமான கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தூத்துக்குடி மாநகரில் இத்திட்டத்தினை முழுமையாக அமல்படுத்தும் வகையில், அனைத்துக் கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்திடக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பினை ஏற்படுத்தவும், புனரமைக்கப்பட வேண்டிய அமைப்புகளை ஆய்வு செய்திடவும் மாநகராட்சி சார்பில் பணியாளர் முதல் அலுவலர் வரை பல்வேறு நிலையிலான குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், மாநகரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு தவறாமல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, பதிவு பெற்ற கட்டுமானப் பொறியாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

