திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில், ஆன்மீக மரபுகளை மீறி அரசியல் தலைவர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டது, பாரம்பரியமாக இறைப்பணி செய்து வந்த சமூகத்தினருக்கு அனுமதி மறுத்தது, பத்திரிகையாளர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்தது உள்ளிட்ட செயல்களுக்கு தமிழக அரசுக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பா.ஜ., தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் ஆர். சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது, முருகப்பெருமானுக்கு மட்டுமே உரிய புனிதமான 'அரோகரா' கோஷத்தை அரசியல் தலைவர்களுக்காக எழுப்பியிருப்பது பக்தர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. ஆன்மீக நிகழ்ச்சியை அரசியல் விளம்பர மேடையாக மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.

இதுபோன்ற செயல்களை மற்ற மத வழிபாட்டுத் தலங்களில் அனுமதிப்பார்களா? மேலும், பல நூற்றாண்டுகளாக சூரசம்ஹார நிகழ்வில் பாரம்பரியமாக இறைப்பணி செய்து வரும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு இந்த ஆண்டு உரிய அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. தங்களது பாரம்பரியப் பணியைச் செய்யச் சென்றவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருப்பது அவர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களுக்காக செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டு, செய்தி சேகரிப்பதில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்தின் குரலை ஒடுக்கும் செயலாகும்.

திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தில் கடந்த ஆறு மாதங்களாக பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. விரைவு தரிசனக் கட்டணத்தில் லஞ்சப் புகார், உண்டியல் பணம் திருட்டு, தங்கும் விடுதிகளில் முறைகேடுகள், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளிட்டவை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

கோவில் இணை ஆணையர் அருணாச்சலம் தொடர்பாகவும், அபிஷேக டிக்கெட்டுகள் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கடந்த மாதம் பா.ஜ., சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கோவிலுக்கு நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமுள்ள இறைத்தொண்டர்கள் மற்றும் உபயதாரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல், நிர்வாக அனுபவமும் இறைபக்தியும் இல்லாதவர்களை அறங்காவலர் குழுவில் நியமித்ததே இத்தகைய பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம். பல கோடி பக்தர்கள் வருகை தரும், அதிக வருவாய் ஈட்டும் திருக்கோவிலில் நிர்வாகத் திறமையுள்ள அதிகாரிகளை நியமிக்க வேண்டியது அவசியம்.

எனவே, கடந்த காலங்களில் திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தைச் சீரமைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டதைப் போல, நேர்மையும் நிர்வாகத் திறமையும் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை உடனடியாக கோவில் நிர்வாக அதிகாரியாக நியமித்து, கோவிலின் பாரம்பரியத்தையும் பக்தர்களின் உரிமைகளையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.