தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, பாலசுப்ரமணியர் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் இன்று (நவ. 16) வெகு விமரிசையாக நடைபெற்றது.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் திருக்கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாக, விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்று திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி காலையில் கணபதி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம், திரிசதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்ரமணியருக்குத் திரளான பக்தர்கள் முன்னிலையில் மங்கல வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருக்கல்யாண வைபவத்தைத் தொடர்ந்து சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை மற்றும் பஞ்சமுக தீபாராதனை உள்ளிட்ட ஆராதனைகள் நடைபெற்றன. இத்திருக்கல்யாண வைபவத்தின்போது ஏராளமான சுமங்கலிப் பெண்கள் தங்களது மஞ்சள் தாலிக்கயிற்றைப் புதிதாக மாற்றிக்கொண்டு பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

