திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு 'அரோகரா' என முழக்கமிட்ட சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (நவ. 16) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சியில், இதுவரை இல்லாத வகையில் தமிழக முதலமைச்சருக்கு அரோகரா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என முழக்கமிட்டுள்ளனர். இதுபோன்ற முழக்கங்கள் திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் எழுப்பப்பட்டதாக இதுவரை வரலாறே கிடையாது.

இந்தப் புதிய கலாச்சாரத்தை தவெக அரசு உருவாக்கியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த நிகழ்வை ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட பலரும் வன்மையாகக் கண்டித்து வருகின்றனர்."

"திருச்செந்தூர் சூரசம்ஹார விழா என்பது சாதாரண நிகழ்ச்சி அல்ல. முருகப்பெருமானின் மீது கொண்ட பக்தியால் ஏழை, எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் ஒரு வார காலம் விரதம் இருந்து, தங்களது உடல், மனதைத் தூய்மைப்படுத்தி, கடுமையான ஆன்மிகக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர்.

ஆலயத்தின் ஒவ்வொரு தூணிலும் பக்தர்கள் தங்களது பக்தியையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் விரதம் இருந்து வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இத்தகைய பாரம்பரியமும், ஆன்மிகப் பெருமையும் கொண்ட சூரசம்ஹார விழாவின் இறுதி நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்களின் பெயர்களை இணைத்து அரோகரா முழக்கம் எழுப்பியது வேதனை அளிக்கிறது.

முருகப்பெருமானுக்கு இணையாக அரசியல் தலைவர்களையும் முன்னிறுத்தி, இறைவனுக்கு எழுப்பப்படும் அரோகரா முழக்கத்தை முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் பெயர்களுடன் இணைத்திருப்பது பக்தர்கள் மத்தியில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மிக நிகழ்ச்சிகள் என்பது அரசியல் விளம்பரத்திற்கான மேடைகள் அல்ல.

பல தலைமுறைகளாக பக்தர்கள் கடைப்பிடித்து வரும் வழிபாட்டு மரபுகளையும், ஆன்மிக உணர்வுகளையும் மதிக்க வேண்டும். திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் வன்மையாகக் கண்டனத்திற்குரியது" இவ்வாறு கீதா ஜீவன் தெரிவித்தார்.