தமிழக அரசின் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் வரும் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், இ.ஆ.ப., தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

மக்களை நாடிச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் வரும் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, வரும் 18.11.2026 அன்று மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் இணைந்து விளாத்திகுளம் வட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலகங்கள் மற்றும் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

அன்றைய தினம் (நவ. 18) பிற்பகல் 2.00 மணி முதல் 2.30 மணி வரை விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படும். அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.30 மணி முதல், முற்பகலில் மேற்கொள்ளப்பட்ட களப் பயணங்கள் மற்றும் அலுவலக ஆய்வுகள் குறித்தும், நகர்ப்புறம் மற்றும் கிராம ஊராட்சிப் பகுதிகளுக்குச் சென்று பல்வேறு அரசுத் துறைகளின் சேவை வழங்குதல் மற்றும் திட்டச் செயல்பாடுகள் குறித்தும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் மதிப்பாய்வுக் கூட்டம் நடைபெறும்.

மேலும், மறுநாளான 19.11.2026 அன்று அதிகாலை முதல் குடிநீர், சுகாதாரம், தூய்மை, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே, மக்கள் இருப்பிடம் தேடிச் சென்று சேவை அளிக்கும் வகையிலும், கள ஆய்வின்போது கண்டறியப்படும் அப்பகுதி மக்களின் தேவைகள் குறித்த முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்ட முகாமின்போது, பொதுமக்கள் தங்கள் வாழ்விட முன்னேற்றத்திற்குத் தேவையான கருத்துக்களையும், கோரிக்கை மனுக்களையும் வழங்கிப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.