தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் சில நபர்கள் கீரிப்பிள்ளையை வேட்டையாடியதாக மாவட்ட வன அலுவலர் இளையராஜாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலர் பாபு தலைமையில் வனவர்கள் லிங்கமுத்து, ஆனந்த் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவினர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (27), ஆனந்த் (28) ஆகியோர் காட்டுப் பகுதியில் கூண்டுகளை வைத்துப் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கான கீரிப்பிள்ளைகளை வேட்டையாடியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ராம்குமார் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து கீரிப்பிள்ளை வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட கூண்டு மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் தூத்துக்குடி 2-ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

