தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் திருக்கோயிலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்பாள் திருக்கல்யாண வைபவம் நேற்று (நவ. 16) இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.
தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 7.25 மணிக்குக் கும்பஜெபம், 10.35 மணிக்கு அபிஷேகம், நண்பகல் 12 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, இரவு 7 மணிக்குச் சுப்பிரமணிய சுவாமி வீதி உலா, இரவு 9.15 மணிக்கு ஆறுமுக அர்ச்சனை ஆகியவை நடைபெற்று வந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, நேற்று (நவ. 16) காலை 7.15 மணிக்குத் தெய்வானை அம்பாள் தபசுக்கு எழுந்தருளினார். மாலை 4.35 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமணக் கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6.05 மணிக்கு 16 வகையான சீர்வரிசைப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு, ஓமகுண்டம் வளர்க்கப்பட்டுத் தபசு காட்சி மற்றும் மாலை மாற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்குச் சங்கர ராமேசுவரர் ஆலய திருக்கல்யாண மண்டபத்தில் தெய்வானை அம்பாள் திருக்கல்யாண வைபவம் தொடங்கியது. இரவு 8 மணிக்குத் திருமாங்கல்யம் பூட்டுதல் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தைத் தொடர்ந்து இரவு 9 மணிக்குச் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி மற்றும் பட்டணப் பிரவேசம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்பாளை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். திருக்கல்யாண நிகழ்வின் முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான விருந்து வழங்கப்பட்டது.

