திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கு காரணமாக சூரசம்ஹார நிகழ்வு கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி, இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் தா.வசந்தகுமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையின் விவரம்: "உலகப் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் மிகவும் முக்கியமான நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சியில், ஒவ்வொரு ஆண்டும் சூரபத்மனோடு சூரப்படைகளாகக் கடும் விரதம் இருந்து வேல் எடுத்து வரும் பக்தர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி வருவது நடைமுறை வழக்கமாகும். ஆனால், இந்த ஆண்டு திருக்கோயில் நிர்வாகம் இவர்களுக்கான அடையாளங்கள் மற்றும் பாதுகாப்பைக் கொடுக்கத் தவறிவிட்டது.

மாவட்டக் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட அலட்சியத்தால், பாதுகாப்புடன் அழைத்து வர வேண்டிய சூரப்படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு வாரம் கடுமையான விரதமிருந்த பக்தர்கள் காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஆளானதால், நிலை தடுமாறிக் கீழே விழுந்தனர்; அவர்களின் பக்திக்குரிய வேல்களும் கீழே தள்ளப்பட்டன. மேலும், அங்கிருந்த பக்தர்களையும் காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்கியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது."

"வாகன பாஸ் மற்றும் விஐபி பாஸ் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேற்றப்பட்டதுடன், வருகை தந்த பல ஆன்மிக, அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் மாநில ஆளுநர் போன்றோரும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் தீவிர அலட்சியப் போக்கைக் காட்டுகிறது.

கந்த சஷ்டி விழாவில் முருகனை மட்டுமே துதிபாட வேண்டிய இடத்தில், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரைத் துதிபாட வைப்பதிலேயே கவனம் செலுத்தியுள்ளனர். எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் கந்த சஷ்டி விழாவை மாவட்ட நிர்வாகம் கேலிக்கூத்தாக்கியுள்ளது."

"ஆகவே, தமிழக அரசு பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாகவும், முகம் சுழிக்கும் அளவிற்கு நடந்து கொண்ட வர்ணனையாளர்கள் மற்றும் பாடகர்கள் மீதும், தங்கள் பணியைச் சரிவரச் செய்யத் தவறிய அதிகாரிகள் மீதும் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தா.வசந்தகுமார் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.