திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரப் பெருவிழாவில், முருகப்பெருமானுக்குப் பதிலாக முதலமைச்சர் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோரைப் போற்றி 'அரோகரா' முழக்கமிட்டதும், பாடல் பாடியதும் கோடிக்கணக்கான பக்தர்களின் இறைநம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வழிபாட்டு மரபு மீறல் எனக் குற்றச்சாட்டு: "முப்பாட்டன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோயிலில் நடைபெற்ற தமிழர்களின் தொன்மையான சூரன் போர் (சூரசம்ஹாரம்) பெருவிழாவில், முருகப்பெருமானுக்குப் போற்றிப் பாட வேண்டிய 'அரோகரா' முழக்கத்தைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேசுக்கும் எழுப்பியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

இறைவனை வழிபட வந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், வழிபாட்டு மரபுகளை மீறி ஆட்சியாளர்களுக்குத் துதிபாடியிருப்பது கோடிக்கணக்கான முருக பக்தர்களான தமிழர்களின் உள்ளத்தை ஆழமாகக் காயப்படுத்தியுள்ள செயலாகும்.

சூரசம்ஹாரப் பெருவிழா என்பது எவ்வித அரசியல் வேறுபாடுமின்றித் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழிபடும் புனிதமான நிகழ்வாகும். அத்தகைய சிறப்புமிக்க பெருவிழாவிலேயே முருகப்பெருமானுக்குச் சமமாக முதலமைச்சரையும், அமைச்சரையும் வைத்து 'அரோகரா' முழக்கமிடுவது எந்த வகையில் நியாயமாகும்? மேலும், சூரபத்மனை வீழ்த்தி அறத்தை நிலைநாட்டிய முருகப்பெருமானின் வீரத்தைப் போற்ற வேண்டிய இடத்தில், முதலமைச்சர் விஜய்யை முன்னிறுத்தி அவரைப் போல முருகப்பெருமான் பகையை வென்றதாகப் பொருள்படும் வகையில் பாடல் பாடியிருப்பது ஏற்புடையதல்ல. முருகப்பெருமானின் வீரத்தை விளக்குவதற்கு முதலமைச்சர் விஜய்யின் பெயர்தான் அளவுகோலா?"

"பதவிகளையும் பொறுப்புகளையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழர்களின் தொன்மையான இறை வழிபாட்டையும், பண்பாட்டு மரபுகளையும் கொச்சைப்படுத்துவதா? இவையெல்லாம் முதலமைச்சர் விஜய் சொல்லித்தான் செய்கிறார்களா அல்லது அவரை மகிழ்விப்பதற்காக அவரைச் சுற்றியிருப்பவர்கள் தன்னிச்சையாகச் செய்கிறார்களா? முதலமைச்சருக்குத் தெரியாமல் நடந்தது என்றால், இத்தகைய செயலை அவர் இதுவரை கண்டிக்காதது ஏன்? மக்கள் அளித்த பதவி என்பது மக்களுக்குப் பணியாற்றுவதற்குத்தானே தவிர, மக்கள் வணங்கும் இறைவனுக்கு இணையாகத் தங்களை உயர்த்திக்கொள்வதற்கல்ல.

எனவே, திருச்செந்தூர் சூரசம்ஹாரப் பெருவிழாவில் வழிபாட்டு மரபை மீறி முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் அரோகரா முழக்கமிட்டவர்களும், முருகப்பெருமானுக்கு மேலாக முதலமைச்சரை முன்னிறுத்திப் புகழ்பாடியவர்களும், முருக பக்தர்களிடம் உடனடியாகப் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

அரசு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்படியொரு செயல் அரங்கேறியதற்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் விஜய் உரிய விளக்கமளிப்பதோடு, இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இனி எந்தவொரு திருக்கோயில் நிகழ்விலும் அரசியல் தலைவர்களுக்கான தனிமனிதத் துதிபாடலுக்கு இடமளிக்கப்படாது என்பதை உறுதிசெய்யவும் வேண்டும்" என சீமான் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.