தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவின் சார்பில், “ஆரோக்கியமான இந்தியாவிற்கு இயற்கை மருத்துவம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய இயற்கை மருத்துவ தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டின் கருப்பொருளான “Naturopathy for a Healthy India” (ஆரோக்கியமான இந்தியாவிற்கு இயற்கை மருத்துவம்) என்பதை முன்னிறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் எபனேசர் ஜோயல், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பத்மநாபன் மற்றும் உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயமணி சைலஸ் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.

தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள், நோய் தடுப்பில் அதன் பங்கு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உரைகள் வழங்கப்பட்டன.

இயற்கை மருத்துவத்தின் பல்வேறு சிகிச்சை முறைகள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் கண்காட்சியில், அக்குபஞ்சர், அக்குபிரஷர், மசாஜ் தெரபி, ஹைட்ரோதெரபி மற்றும் மண் சிகிச்சை உள்ளிட்டவை தொடர்பான IEC காட்சிப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக, நீரிழிவு நோய் மற்றும் மூட்டுத் தேய்மான நோயான 'ஆஸ்டியோஆர்த்ரைடிஸ்' போன்ற பாதிப்புகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சிறப்பு உணவுத் திட்டங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு, நோய் மேலாண்மையில் சத்தான உணவுப் பழக்கவழக்கங்களின் முக்கியத்துவம் விளக்கப்பட்டது.

“நோய் வந்த பின் சிகிச்சை பெறுவதைவிட, நோய் வருமுன் தடுப்பதே சிறந்தது” என்ற தத்துவத்தை வலியுறுத்தும் வகையில், யோகா மற்றும் இயற்கை வாழ்க்கைமுறையை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியதின் அவசியத்தை மருத்துவப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.