தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட அலகு-1 மற்றும் அலகு-2 ஆகியவற்றின் மறுசீரமைப்புப் பணிகளை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேரில் பார்வையிட்டு, 210 மெகாவாட் திறன் கொண்ட அலகு-1-ன் சோதனை ஓட்டத்தை இன்று (நவம்பர் 17) தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட அலகு-1 மற்றும் அலகு-2 ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்புப் பணிகளை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அலகு-1-ன் (210 மெகாவாட்) சோதனை ஓட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) பி.என். ஸ்ரீதர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் கு. சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறியதாவது: "தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அலகு-1-ன் தரைத்தளத்தில் உள்ள கேபிள் அறையில் கடந்த 15.03.2025 அன்று எதிர்பாராமல் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அலகு-1 மற்றும் அலகு-2-ன் கேபிள் வழித்தடங்கள், உயர் மற்றும் குறைந்த மின்னழுத்த மின் இணைப்புக் கட்டமைப்புகள், மின் பாதுகாப்புச் சாதனங்கள் மற்றும் அலகுக் கட்டுப்பாட்டு அறைகள் சேதமடைந்தன.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரால் தீ முழுமையாக அணைக்கப்பட்டு, மின்வாரியப் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் கொதிகலன் (Boiler), சுழலி (Turbine), மின்னாக்கி (Generator) ஆகிய முக்கிய உபகரணங்கள் சேதமின்றிப் பாதுகாக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அடுத்த தளத்தில் இருந்த அலகு-3 குறைந்த சேதத்துடன் பாதுகாக்கப்பட்டு, கடந்த 03.04.2025 அன்றே மீண்டும் இயக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டு 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

அலகு-1 மற்றும் அலகு-2 ஆகியவற்றை முழுமையாக மறுசீரமைப்பதற்கான பணி ஆணை கடந்த 16.10.2025 அன்று வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், அவரது வழிகாட்டுதலின்படி மறுசீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்தப்பட்டன. இதன் விளைவாக, அலகு-2 கடந்த 28.07.2026 முதல் வெற்றிகரமாகத் தனது முழுத் திறனான 210 மெகாவாட் மின்சாரத்தைத் தமிழக மின்கட்டமைப்பிற்கு வழங்கி வருகிறது.

தொடர்ந்து, அலகு-1-ல் சுமார் 400 கிலோமீட்டர் அளவிலான புதிய மின் கேபிள் வழித்தடங்கள் மற்றும் அனைத்து மின் கட்டுப்பாட்டுப் பாதுகாப்புச் சாதனங்களும் நிறுவப்பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று சோதனை ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சோதனை மற்றும் இயக்குதல் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, இன்னும் ஒரு வார காலத்திற்குள் அலகு-1 மீண்டும் இயக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டு முழுத் திறனான 210 மெகாவாட் மின்சாரத்தை மின்கட்டமைப்பிற்கு வழங்கும்" என அமைச்சர் தெரிவித்தார்.

ThermalMiniste2.jpg

முன்னதாக, அனல் மின் நிலையச் சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குக் கூடுதல் நிவாரணத் தொகை வழங்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதற்காக, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரை நேரில் சந்தித்துத் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி கழக இயக்குநர் (தொழில்நுட்பம்) ஜான் டால்டன், அனல் மின் நிலையத் தலைமைப் பொறியாளர் பிரபாகர், மேற்பார்வைப் பொறியாளர்கள் நிக்சன், சகுந்தலா, சந்திரசேகர், நாகராஜன், கமலகண்ணன், சுரேஷ்குமார் உள்ளிட்ட துறைசார் அலுவலர்கள் உடனிருந்தனர்.