தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி - தூத்துக்குடி மண்டலம், கோவில்பட்டி கிளையைச் சார்ந்த அரசுப் பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டு மதுபானம் வாங்கிய விவகாரத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி கிளைக்குச் சொந்தமான TN 72 N 2826 எண் கொண்ட அரசுப் பேருந்து, கடந்த நவம்பர் 16-ஆம் தேதி இரவு 9.05 மணியளவில் சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திருவேங்கடம் அருகே வந்தபோது, பேருந்தைச் சாலையோரத்தில் நிறுவிய ஊழியர்கள், அங்கிருந்த மதுபானக் கடையிலிருந்து மற்றொரு நபர் மூலம் மதுபானப் பாட்டில் வாங்கியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் (Instagram) வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்புகாரின் அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, பணியில் இருந்த ஓட்டுநர் கணேசமூர்த்தி (பணியாளர் எண்: 10577) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவத்தில் உடன் இருந்த தினக்கூலி நடத்துநர் முத்தையா நிரந்தரமாகப் பணியிலிருந்து விடுவித்து தூத்துக்குடி மண்டலப் பொது மேலாளர் உரிய ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

