தூத்துக்குடி நகர் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குவோர் மீதான சோதனையைக் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் உள்ள குரூஸ் பெர்னாந்து சிலை அருகில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் தலைமையில் காவல்துறையினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களைத் தடுத்து நிறுத்தி ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்துச் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சோதனையின்போது, தலைக்கவசம் அணியாமல் வருவது, ஓட்டுநர் உரிமம் மற்றும் முறையான ஆவணங்கள் இன்றி வாகனம் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 51 இருசக்கர வாகனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு மொத்தம் ரூ.1.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தூத்துக்குடிப் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள் வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.