தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு அருகேயுள்ள கே. கைலாசபுரம் பகுதியில் பால்பண்ணை உரிமையாளர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே. கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நடேஸ்குமார் (44). இவர் அப்பகுதியில் பால்பண்ணை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள ஒரு கடை அருகே அவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த மர்மக் கும்பல் ஒன்று, நடேஸ்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த நடேஸ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்துத் தகவல் அறிந்த நாரைக்கிணறு காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த நடேஸ்குமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.