தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் - மணியாச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை சுமார் 10 மணி அளவில், மதுரையிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற ரயிலில் பயணம் செய்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் தண்டவாளக் கற்களின் மீது விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்துத் தகவல் அறிந்த தூத்துக்குடி ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.

இது தொடர்பாக இளவேலங்கால் கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் இருப்புப்பாதை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் மற்றொரு சம்பவத்தில், சென்னை தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த அந்தியோதயா விரைவு ரயில் இன்று காலை கோவில்பட்டி - கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது, அங்கு ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் மீது ரயில் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற தூத்துக்குடி ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள தாயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அப்பாசாமி (62) என்பது தெரியவந்தது. கோவில்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு, மீண்டும் ரயிலில் விருதுநகர் செல்வதற்காக ரயில் நிலையத்திற்குச் சென்றபோது தண்டவாளத்தைக் கடந்ததால் இவ்விபத்து நேரிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.