தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சீனிவாசன் (55). இவர் எலக்ட்ரிக் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று காலையில் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரம் பகுதியில் வேலைக்குச் செல்வதற்காக மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

எம்.கோட்டூர் விலக்கு அருகே அவர் சாலையைக் கடக்க முயன்றபோது, அவருக்குப் பின்னால் தூத்துக்குடியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் எதிர்பாராத விதமாக அவரது மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்தார். சிறிது நேரத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனால், மொபட் மீது மோதிய காரை ஓட்டுநர் நிறுத்தாமல் வேகமாகச் செலுத்தித் தப்பியோடிவிட்டார். இது குறித்துத் தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் காவல் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சீனிவாசனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த சீனிவாசனுக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள எட்டயபுரம் காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு காருடன் உடன் தப்பிய ஓட்டுநரைக் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.