தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டிச் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்துவோர் மீது மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களிலிருந்து வெளியேறும் குப்பைகளை முறையாகத் தரம் பிரித்து மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்காமல், வளாகத்திற்கு வெளியே பொது இடங்களில் கொட்டியது அதிகாரிகளின் ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, விதிமீறலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அபராதம் விதித்தனர்.
மேலும், இனிவரும் காலங்களில் குப்பைகளை வளாகத்திற்கு வெளியே கொட்டக்கூடாது எனவும், மக்கும் குப்பை, மக்காத குப்பை உள்ளிட்ட நான்கு வகைகளாகக் குப்பைகளை முறையாகப் பிரித்து மாநகராட்சி குப்பை சேகரிப்பு வாகனங்களில் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள் மற்றும் கடைகளிலிருந்து குப்பைகளைப் பொது இடங்களில் கொட்டுவோர் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனத் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

