தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே உள்ள சிங்கித்துறை கடற்கரைப் பகுதியில் இன்று (நவம்பர் 18) லட்சக்கணக்கான மீன்கள் திடீரெனக் கரையோரத்திற்குப் படையெடுத்து வந்தன. கடல் அலைகளுடன் கரை ஒதுங்கிய இந்த மீன்களைப் பொதுமக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர்.
சிங்கித்துறை கடற்கரைப் பகுதியில் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான மீன் கூட்டங்கள் கரையோரப் பகுதிக்கு வந்தன. அலைகளின் வேகத்தில் லட்சக்கணக்கான மீன்கள் கரையில் துள்ளிக் குதித்தன.
இதைக் கண்ட அப்பகுதி மீனவர்களும், பொதுமக்களும் மிகுந்த உற்சாகமடைந்தனர். இந்தத் தகவல் காட்டுத்தீ போல் பரவியதையடுத்து, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தனர். தொடர்ந்து, கரையில் ஒதுங்கிய மீன்களைப் பிடிக்க மக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு தங்களது கைகளில் கிடைத்த பைகள், கூடைகள் மற்றும் பாத்திரங்களில் மீன்களை அள்ளிச் சென்றனர்.
கடலில் ஏற்படும் நீரோட்ட மாற்றம் அல்லது பெரிய மீன்களுக்குப் பயந்து சிறிய வகை மீன்கள் கூட்டமாகக் கரையோரத்திற்கு வந்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சிங்கித்துறை கடற்கரைப் பகுதியில் மீன்கள் துள்ளிக்குதிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இதனிடையே, கடற்கரையில் திரண்ட இளைஞர்கள் மீன்கள் கரை ஒதுங்கும் காட்சிகளை தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோவாகப் பதிவு செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால், மீன்வளத்துறை அதிகாரிகள் கடற்கரைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, மீன்கள் அதிக அளவில் கரை ஒதுங்குவதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

