தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் இன்று (18.11.2026) மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், அவர்கள் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், சிவலார்பட்டி கிராமத்தில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ள பணியினையும், முத்துசாமிபுரம் கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 1.05 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியின் மூலம் 6 ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோக செயல்திட்ட பணிகளையும்,
கூட்டுறவுத்துறையின் சார்பில் சிவலார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், சிவலார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வங்கியின் நியாய விலைக்கடையில் பொருட்களின் தரம், இருப்பு குறித்தும், அயன்பொம்மையாபுரம் கிராமத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் தையல் அலகின் செயல்பாடுகள் குறித்தும்,
புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணியக்காரன்பட்டி ஊராட்சியில் பெரிய ஓடை – நெடுங்குளம் கண்மாயில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை நிதியின் கீழ் ரூ.33.25 இலட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதையும் மற்றும் ரூ.53.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தினையும், அதே ஊராட்சியில் குடிநீர் ஊரணி மேற்கு பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 14வது மானிய நிதியின் கீழ் ரூ. 7.03 இலட்சம் மதிப்பீட்டில் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ள பணியினையும், மெட்டில்பட்டி கிராமம் மற்றும் சிவலார்பட்டி ஊராட்சி, திருநகர் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளி வீடு கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
மேலும், வி.புதூர் சமூக நீதி பள்ளி மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்தும், வி.புதூர் பேரூராட்சி ஒருங்கிணைந்த வேளாண் விற்பனை வளாகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொருட்களை வழங்கினார். வி.புதூர் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், வி.புதூர் பேரூராட்சி சார்பில் சட்டமன்ற நிதியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் நூலகத்திற்கான கட்டடம் கட்டப்பட்டு வரும் பணியினையும், வி.புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ பணிகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ள ஆய்வின் பின்னூட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் விரிவாக கேட்டறிந்தார்.
தொடர்ந்து, விளாத்திகுளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மருத்துவமனைக்கான கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகள் மற்றும் மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ பணிகள் குறித்தும், விளாத்திகுளத்தில் உள்ள சமூகநீதி பள்ளி மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்தும், குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.சரவணன், கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இளஞ்சேரன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), திருநெல்வேலி மண்டலம் சுஷம்மா, தனித் துணை ஆட்சியர் (பொ) (ச.பா.தி) பிர்தௌஸ் பாத்திமா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் பென்னட் ஆசீர், விளாத்திகுளம் வட்டாட்சியர் அந்தோணி ஜெபராஜ் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

