தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நகரின் முக்கியப் பகுதியான ஜெயராஜ் சாலையில் சாலையோரங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் மற்றும் இதர ஆக்கிரமிப்புகள் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
சாலையில் வாகனப் போக்குவரத்து எவ்வித இடையூறுமின்றிச் சீராக நடைபெறுவதற்கும், பாதசாரிகள் பாதுகாப்பாகச் சென்று வருவதற்கும் ஏதுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

