தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே உள்ள வடக்கு சிலுக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (42). இவர் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் காரில் தூத்துக்குடிக்கு வந்துள்ளார்.

பின்னர் அவர் எட்டயபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் ஒரு இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு ஊர்வலத்தின் பின்னால் மெதுவாகச் சென்ற பிரபாகரன், புதிய பேருந்து நிலையம் மேம்பாலம் அருகே சென்றபோது இறுதி ஊர்வலத்தைக் காரில் முந்திச் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஊர்வலத்தில் வந்த 6 பேர், மூன்று இருசக்கர வாகனங்களில் பிரபாகரனின் காரைப் பின்தொடர்ந்து சென்று வழிமறித்தனர். பின்னர், அவர்கள் காரை சரமாரியாகத் தாக்கிச் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து பிரபாகரன் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். காரைச் சேதப்படுத்திய 6 பேரையும் பிடிக்கப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.