தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் தாலுகா, வடக்கு இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் கோபால் (50). இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். மது அருந்தும் பழக்கம் கொண்டவரான கோபாலுக்குக் குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி வீட்டில் யாருக்கும் தெரியாமல், மதுபோதையில் இருந்த கோபால் களைக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து உறவினர்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டுத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கோபால் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருநெல்வேலி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையம் அளித்த தகவலின் பேரில் கயத்தார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

