தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணியில்திமுக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், திமுக வடக்கு மாவட்டச் செயலாளருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 12.11.2026 அன்று மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா என்பதை மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கழகச் செயலாளர்கள் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், ஏற்கெனவே நடைபெற்ற எஸ்.ஐ.ஆர். வாக்காளர் திருத்தப் பணியின்போது விடுபட்ட வாக்காளர்களைக் கண்டறிந்து, உரிய படிவங்கள் மூலம் அவர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல், 01.01.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கும் தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தி புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பங்களைச் சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 5 வரை விண்ணப்பிக்கலாம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை 12.11.2026 முதல் 05.12.2026 வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO), வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள்:

* நவம்பர் 21 – சனிக்கிழமை

* நவம்பர் 22 – ஞாயிற்றுக்கிழமை

* நவம்பர் 29 – ஞாயிற்றுக்கிழமை

இந்த நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் திமுக தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், வட்ட, வார்டு, கிளை நிர்வாகிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் முழுமையாகப் பங்கேற்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கீதாஜீவன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.